சென்னை, ஜூலை 6: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக வரும் 8-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி ஆலோசிக்க வேண்டும் என்று கூறினார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கையில், அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி ஆலோசிக்கப்படும் என உறுதிபட தெரிவித்திருந்தார். இந்நிலையில், வரும் 8-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 8-ம் தேதி மாலை 5.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், இதில் 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.