மதுரை, ஜூலை 6:  மதுரை அருகே இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி பசும்பொன் நகரைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தரை மற்றும் இரு தளங்களுடன் வீடு கட்டும் பணி நடைபெற்று வந்தது.

நேற்று சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் காசிநாதன் (வயது 45), அருண்குமார் (21), பாலு (55) உள்பட ஏழு பேர் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கான்கிரீட் பூச்சு உள்ளிட்ட பணிகள் நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராத வகையில் கட்டிடத்தின் தரைத்தளம் இறங்கியது. இதனால் முதல் மற்றும் இரண்டாம் தளங்கள் சீட்டுகட்டு போல சரிந்து விழுந்தன.

இதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஏழு பேரும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக செக்கானூரணி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அப்பகுதிக்கு மாவட்ட கலெக்டர் ராஜசேகர், டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, போலீஸ் சூப்பிரண்ட் மணிவண்ணன் ஆகியோர் சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

இடிபாடுகளில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே காசிநாதன் பரிதாபமாக இறந்தார்.

இந்நிலையில் அருண்குமார், பாலு ஆகிய இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். மற்ற 4 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணை நடத்திய போலீசார் வீட்டின் உரிமையாளர் மாதவனை கைது செய்தனர்.