சென்னை, ஜூலை 6: சென்னை புறநகர் பகுதிகளில் விவசாயிகள் ரூ.6 ஆயிரம் நிதி பெற வருகின்ற 9-ந் தேதி அன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதித் திட்டம் 24.2.2019 முதல் செயல்படுத் தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருந்த சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, இத்திட் டம் தற்போது அனைத்து விவசாயி களுக்கும் அதாவது நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விடுபட்ட தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இத்திட்டம் இம்மாவட்டத்தில் தொடர்ந்து நடைமுறையில் செயல்பட்டு வருகிறது. வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசு தாரர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இதுவரை நிலமானது இறந்த தனது தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால், அதற்குரிய வாரிசுதாரர், சம்மந்தப்பட்ட வட்டாட்சியரை அணுகி விண்ணப்பம் அளித்து பட்டா மாறுதல் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தற்போது வருகின்ற 9-ந்தேதி சிறப்பு முகாம், மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் தலைமையில் அம்பத்தூர், ஆலந்தூர், மாதவரம், மதுரவாயல், சோழிங்கநல்லூர் மற்றும் திருவொற்றியூர், வட்டாட்சியர் அலுவலகத்திலும், வருவாய் ஆய்வாளர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

எனவே, அனைத்து விவசாயிகளும் இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.