கடலூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

தமிழ்நாடு

கடலூர், ஜூலை 6: கடலூர் முதுநகர் அடுத்த மனகுப்பம் பகுதியில் உள்ள விளைநிலத்தில் கிடந்த 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண்சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடலூர் மாவட்டம், முதுநகர் பச்சையாங்குப்பம் அடுத்த மனகுப்பத்தில் உள்ள விளைநிலத்தில் அடையாளம் தெரியாத ஆண்சடலம் கிடப்பதை கண்டு அப்பகுதிவாசிகள் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதன்பேரில், கடலூர் முதுநகர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.  மீட்கப்பட்ட சடலத்தில் வெட்டுக்காயங்கள் இருப்பதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கருதப்படுகிறது.

இதனிடையே, கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.  இவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.