காஞ்சிபுரம், ஜூலை 6: பெருமாளுக்கு மிகவும் உகந்த சனிக்கிழமையான 6-ம் நாளான இன்று அத்திவரதருக்கு ராமர் நிற பட்டு அணிவிக்கப்பட்டு காட்சிதந்தார்.
அத்திவரதரை காண நீண்ட தூரம் பக்தர்களின் கூட்டம் அணி வகுத்து நிற்பதால் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.மாலை வரை ஒரு லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீரில் இருந்து வெளியே கொண்டு வரும் அத்திவரதர் வைபவம் கடந்த 1-ம்தேதி நடைபெற்றது. கடந்த 5 நாட்களாக வெவ்வேறு சிறப்பு அலங்காரத்தில் அத்திவரதர் காட்சி தந்தார். இதுவரை பல லட்சம் பக்தர்கள் வந்து தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் ஆறாம் நாளான இன்று முதல் சனிக்கிழமை என்பதால் இன்று அதிகாலை அத்திவரதருக்கு ராமர் கலர் பட்டு ஆடை அணிவிக்கப்பட்டு மல்லிகை, முல்லை, மஞ்சள் நிற பூக்களால் தோரணங்கள் கட்டப்பட்டு சுப்ரபாதம் பாடி பக்தர்கள் பரசவம் அடையும் வகையில் கோவிந்தா.. கோவிந்தா.. என்று கோஷத்துடன் எழுப்பினர்.

அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இன்றுகாலை 5 மணி முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் 3 கிலோ மீட்டர் தூரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.  பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை என்பதால் இரவு 8மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று கலெக்டர் தெரிவித்து இருந்தார்.  இதனால் வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து கட்டுக்கடங்காத கூட்டம் காஞ்சியில் குவிந்துள்ளனர். இன்று காலை முதல் மதியம் 12 மணி வரை 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறை சார்பில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில தனியார் அமைப்பினரும் பக்தர்களின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று தண்ணீர் வழங்கி தாகத்தை தீர்த்து வருகின்றனர்.  மேலும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளையும் ரோப் கார்கள் மூலம் கொண்டு சென்று அவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் தரிசனம்செய்வதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இன்று காலை முதல் கட்டுக்கடங்காத கூட்டத்தையொட்டி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுகுறித்து கலெக்டர் பொன்னையா கூறுகையில், காலை 12 மணி வரை 50 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்துள்ளதால் மாலை வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என்றும் பாதுகாப்பு மற்றும்அடிப்படை வசதிகள் சரியான முறையில் செய்துள்ளோம் என்றும் கூறினார்.