லார்ட்ஸ், ஜூலை 6:  ஓய்வுபெறுவது வருத்தம்தான், அதேசமயம் டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்த இது உதவும் என்று பாகிஸ்தான் வீரர் ஷோயிப் மாலிக் உருக்கம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஷோயப் மாலிக், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நேற்று வங்கதேசத்தை எதிர்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆடிய லீக் போட்டியுடன் இந்த ஓய்வு அறிவிப்பு வந்துள்ளது. மாலிக், தொடர்ந்து டி20 போட்டிகளில் பாகிஸ்தான் சார்பில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்விகண்ட பிறகு, ஷோயப் மாலிக், பலத்த விமர்சனங்களுக்கு உள்ளானார். அந்தப் போட்டியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் அவர் இடம்பிடிக்கவில்லை. பாகிஸ்தான் சார்பில் 287 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ள மாலிக், 33.55 சராசரியில் 7534 ரன்களை குவித்துள்ளார். அதேபோல 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்களை விளாசியுள்ளார்.

நேற்றைய போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷோயிப், இந்த உலகக் கோப்பைத் தொடருடன் நான் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவேன் என்று அறிவித்திருந்தேன். அதேபோல இப்போது ஓய்வு பெற்றுள்ளேன். ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை எப்போதும் நான் விரும்பினேன். இதில் ஓய்வு பெறுவது வருத்தம்தான். ஆனால், இது டி20 போட்டிகளில் நான் அதிக கவனம் செலுத்த உதவும். என் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும் என்பதில் மகிழ்ச்சி என்று உருக்கமாக பேசினார். இதேபோல், இதுவரை என்னுடன் பயணித்த வீரர்கள், பயிற்சியாளர்கள், ஸ்பான்ஸர்கள், ஊடகங்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி என்று அவரது ஓய்வு அறிவிப்பு குறித்த டிவிட்டர் பதிவிலும் பதிவிட்டுள்ளார்.