உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு அச்சுறுத்தல்

உலகம்

லீட்ஸ், ஜூலை 7: இங்கிலாந்தில் நேற்று லீட்ஸ் மைதானத் தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதிய போட்டி நடைபெற்ற போது இந்தியாவுக்கு எதிரான வாசகங்களுடன் ஆளில்லாத விமானம் இருமுறை பறந்தது கிரிக்கெட் மைதானத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

ஆட்டம் தொடங்கிய சில நிமிடத்திலேயே ஆள் இல்லாத குட்டி விமானம் மைதானத்தை சுற்றி பறந்தது. அதில் காஷ்மீருக்கு நீதி வேண்டும் என்று எழுதப்பட்ட பேனர்கள் பொருத்தப்பட்டு இருந்தது. இதை வியப்புடன் அனைவரும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த அரை மணி நேரத்தில் இன்னொரு ஆளில்லாத விமானம் பறந்தது. அதில் “இந்தியாவே இனப்படுகொலையை நிறுத்து’’, “காஷ்மீரை விடுதலை செய்’’, “விரட்டி படுகொலை செய்யும் கும்பலுக்கு முடிவு கட்ட உதவுங்கள்’’ என எழுதப்பட்ட வாசகங்களை கொண்ட பேனர்கள் இடம் பெற்றிருந்தன.

இதே மைதானத்தில் ஜூன்  29-ல் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெற்றபோது பலுசிஸ்தானுக்கு நீதி வேண்டும் என்ற பேனருடன் ஆளில்லாத விமானம் ஒன்று பறந்தது. இந்த விமானம் பிரார்ட் போர்ட் விமான நிலையத்தில் இறங்கியபோது அதில் இருந்த சிலர் வெளியேற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.