சென்னை, ஜூலை 7: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் இருவரும், பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாசும் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுவதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ராஜ்யசபா எம்.பி.க்களை தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும், தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தேர்வு செய்ய முடியும்.

அதிமுக கூட்டணியில் தோழமை கட்சியான பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல திமுக கூட்டணியில் அதன் தோழமை கட்சியான மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளனர். தொ.மு.ச.வை சேர்ந்த சண்முகம், வக்கீல் வில்சன் ஆகிய இருவரும் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். ம.தி.மு.க. சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடுகின்றார். இதையடுத்து திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் நேற்று மனுதாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் அறிவிக்கப்பட்டனர். சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பா.ம.க.வுக்கு மற்றுமுள்ள ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக அக்கட்சி அறிவித்துள்ளது.

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் அதிமுக மற்றும் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை காலை தலைமை செயலகத்தில் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளனர்.

மறுநாள் 9-ந்தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்ப பெற 11-ந்தேதி கடைசி நாளாகும். தற்போதைய நிலவரப்படி அதி.மு.க கூட்டணி சார்பில் 3 வேட்பாளர்களும், திமுக கூட்டணி சார்பில் 3 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள்.

வைகோவுக்கு சிக்கல்?

காலியாகவுள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான வேட்புமனுதாக்கல் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், திமுக சார்பில் ஒதுக்கப்பட்ட ராஜ்யசபா சீட்டிற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வேட்புமனுதாக்கல் செய்தார். தேசதுரோக வழக்கில் கடந்த வெள்ளியன்று 1 ஆண்டு தண்டனை நீதிமன்றம் அளித்துள்ள நிலையில் ராஜ்யசபா தேர்தலில் வைகோ தாக்கல் செய்துள்ள வேட்புமனு நிரகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வேட்புமனுதாக்கல் செய்த வைகோ நிருபர்களிடம் கூறும்போது, தனது மனு ஏற்கப்படுமா என்பது 9-ம் தேதி தெரியும் என்று கூறினார். சந்தேகத்துடன் அவர் தெரிவித்திருப்பது, வேட்புமனு ஏற்கப்படுமா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.