சென்னை, ஜூலை 7: 5 மாதங்களாக காணாமல் போய் பிடிபட்ட முகிலனிடம் சென்னையில் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர்.

ஈரோட்டை சேர்ந்தவர் முகிலன் (வயது 51) சமூக ஆர்வலரான இவர் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் தொடர்பான வீடியோவை கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிட்டார்.

அன்று இரவு மதுரை செல்வதற்காக எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு சென்ற முகிலன் மாயமானார். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவ வராததால், இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் முகிலனை தீவிரமாக தேடிவந்த நிலையில். அவரை கண்டுபிடித்து தர கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் நேற்று திருப்பதி ரெயில் நிலையத்தில் தாடியுடன் ஒருவர் தமிழில் கோஷமிடுவதாக திருப்பதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ரெயில்வே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது திருப்பதி சென்ற முகிலனின் பள்ளி தோழர் ஒருவர் அவரை அடையாளம் கண்டு, இதுபற்றி அவர் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ‘

இந்த நிலையில் சிபிசிஐடி போலீசாருக்கும் திருப்பதி ரெயில் நிலையத்தில் முகிலன் பிடிப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. உடனடியாக அவர்கள் திருப்பதி ரெயில்வே போலீசாரை தொடர்பு கொண்டு பிடிப்பட்டது முகிலன்தான் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, தமிழக சிபிசிஐடி போலீசாரிடம் இரவு 11,30 மணியளவில் முகிலன் ஒப்படைக்கப்பட்டார்.

’இன்று அதிகாலை 4,30 மணியளவில் சென்னை அழைத்துவரப்பட்ட முகிலன் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைக்கப்பட்டு அவரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர், அப்போது முகிலனிடம் அவர் காணாமல் போனது எப்படி என்பது பற்றியும் ,இத்தனை நாட்கள் அவர் எங்கு இருந்தார். அவர் தலைமறைவாக இருக்க வேண்டிய காரணம் என்ன அவர் தங்கியிருந்த இடம் குறித்து அவர் குடும்பத்திற்கு தேரியுமா என்று, முகிலனிடம் தீவிர விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. சிபிசிஐடி போலீசார் அவரது வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்தனர்.
இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகிலன் பிடிப்பட்டது எப்படி?

முகிலன் பிடிப்பட்டது எப்படி என்பது குறித்து திருப்பதி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர், கூறியதாவது:-

நேற்று காலை மன்னார்குடியில் இருந்து திருப்பதிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் தாடியுடன் ஒருவர் கோஷங்கள் எழுப்பியபடி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் திருப்பதி வந்த உடன் மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர் இருந்த பெட்டிக்கு போலீசார் சென்றனர். அப்போது அவர் மத்திய மாநில அரசுக்கு எதிராகவும் கூடங்குளம், அனுமின் திட்டம், ஸடெர்லைட் ஆலை ஆகியவற்றிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்.

போலீசார் அவரை கீழே இறக்கினர், அப்போது ரெயில் முன் பாயமுயன்றார். அவரை தடுத்து நிறுத்தினோம், அவர் எழுப்பிய கோஷங்கள் தமிழில் இருந்ததால், எங்களால் சரிவர புரிந்து கொள்ளமுடியாவில்லை, அவருக்கு மதிய உணவு தரப்பட்டது, அவரிடம் விசாரித்தபோது,  தனது ஊர் காட்பாடி என்றார். அவர் மனநிலை பாதித்தது போல் இருந்ததால், அவரை திருப்பதி ரெயில்வே காவல் நிலையத்தில் உட்கார வைத்திருந்தோம், அப்போது தான் அவர் தமிழக சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வரும் முகிலன் என்பது தெரியவந்தது, பின்னர் தமிழக போலீசாரி வேண்டுகோளை ஏற்று முகிலனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரெயிலில் காட்பாடிக்கு அனுப்பி வைத்தோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘மனநலம் பாதிப்பு’

காட்பாடியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முகிலன், தான் கடத்தி செல்லப்பட்டதாகவும், இரண்டு மாதகாலமாக தன்னை அடைத்து வைத்து சித்திரவதை செய்து மனநலம் பாதிக்கச் செய்ததாகவும், கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.