சென்னை,ஜூலை 7: பூம்புகார், சீர்காழி உள்ளிட்ட தொகுதிகளை உள்ளடக்கி மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அத்தொகுதி சீர்காழி தொகுதி எம்எல்ஏ பாரதி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு சீர்காழி தொகுதி எம்எல்ஏ பாரதி பேசுகையில்: கொள்ளிடம், வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் தடுப்பணை அல்லது கதவணை கட்டி தர வேண்டும். கொள்ளிடத்தில் தனி தாலுக்கா, தீயணைப்பு நிலையங்கள் அமைத்து தர வேண்டும். சீர்காழி நகரப்பகுதிக்கும், பழைய பாளையத்தில் தனித்தனியே 110-33 கே.வி. துணை மின் நிலையம் விரைந்து முடிக்க வேண்டும்.

திருநகர் அல்லது திருவாலி, கொண்டல் ஆகிய பகுதியில் துணை மின் நிலையம் அமைத்து தர வேண்டும். பழையாறு மீன்பிடி துறைமுகத்தினை நவீனபடுத்தி, விரிவுப்படுத்தி தர வேண்டும். கீழ மூவக்கரையிடில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும். மடவாமேடு மீன் கிராமத்திற்கு கடற்கரையில் மீன் உலர் களம், ஏலக்கூடம், உயர் கோபுர மின் விளக்கு அமைத்து தர வேண்டும்.

சீர்காழி நகரத்திற்கு பாதாள சாக்கடை திட்டம், காதி பூங்காவை சீர் செய்தல், நவீன விளையாட்டு மைதானம், நகராட்சி அரசினர் மேல்நிலைப்பளிக்கு புதிய கட்டிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பாதாள சாக்கடை, பேரூராட்சிக்கு புறவழிச்சாலை, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உள்ள பால்குளிரூட்டும் நிலையத்தினை விரிவு படுத்த வேண்டும்.

பூம்புகார், சீர்காழி உள்ளிட்ட தொகுதிகளை உள்ளடக்கி மயிலாடுதுறையினை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும். அதே போன்று மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.