டோனியை பிஜேபிக்கு இழுக்க தீவிர முயற்சி

இந்தியா

 புதுடெல்லி, ஜூலை 7: பிரபல கிரிக்கெட் வீரர் டோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பிஜேபியில் சேருவார் என்றும், ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் அக்கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்வார் என்றும் பிஜேபியின் உயர் மட்ட தலைவர்கள் கூறியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங¢ டோனி ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார். இந்த உலக கோப்பையுடன் இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என பரபரப்பாக பேசப்படுகிறது.

இது குறித்து நேற்று லண்டனில் பேட்டி யளித்த அவர் தனது ஓய்வு எப்போது என்பதை ஊடகங்களின் யூகத்துக்கு விட்டுவிடுவதாக கூறினார். நான் எப்போது ஓய்வு பெறுவேன் என்பது எனக்கே தெரியாது என்று அவர் தெரிவித்தார். இந்த நிலையில் பிஜேபி தலைவர்கள் அவரை தங்கள் கட்சிக்கு இழுத்து தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களோடு சேர்த்து முன்கூட்டியே அக்டோபரில் தேர்தல் நடைபெறலாம் என பேச்சு அடிபடுகிறது.

கிரிக்கெட்டால் டோனி பெற்றுள்ள செல்வாக்கை பிஜேபிக்கு பயன் படுத்தினால் ஜார்கண்டில் ஜேஎம்எம், ஆர்ஜேடி மற்றும் காங்கிரசை எளிதில் வீழ்த்திவிடலாம் என அக்கட்சியினர் கருதுகின்றனர். பிஜேபியின் உயர் மட்ட தலைவர்கள் ஏற்கனவே டோனியுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது,
அரசியலில் ஈடுபட மாட்டேன் என்பதில் டோனி உறுதியாக இருந்தால் அவரை கட்சியில் சேர்க்காமல் பிரச்சாரத்திற்காகவாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் பிஜேபி உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

தற்போது பிஜேபியில் வாக்காளர் களை கவரும் எந்திரமாக பிரதமர் மோடி இருக்கிறார். அவருக்கு அடுத்து டோனி 2-வது கவர்ச்சிகரமான தலைவராகி வாக்குகளை குவிப்பார் என பிஜேபி நம்புவதாக கட்சியின் வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி டோனியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிஜேபி தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தேசிய செயலாளர் சரோஜ் பாண்டே மற்றும் டெல்லி மாநில தலைவர் மனோஜ்திவாரி சந்தித்தனர். அப்போது மோடி ஆட்சியின் 5 ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் பிரச்சார இயக்கம் ஒன்றை தொடங்கிவைக்குமாறு அழைப்பு விடுத்தனர். ஆனால் டோனி கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை.