விழுப்புரம், ஜூலை 7: கள்ளக்குறிச்சி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சமூக ஆர்வலர் முகிலனின் மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தச்சூர் அடுத்த ஏமப்பேர் புறவழிச்சாலை பிரிவு ரோட்டில் இன்று காலை சுமார் 7,30 மணியளவில் வெள்ளை நிற கார் ஒன்று டயர் வெடித்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது.

அக்காரில் முன்புறம் அமர்ந்து வந்தவர் சமூக ஆர்வலர் முகிலனின் மனைவி பூங்கொடி என கூறப்படுகிறது. திருப்பதியில் போலீசாரிடம் சிக்கிய முகிலன் சென்னை அழைத்துவரப்பட்ட தகவல் கிடைத்ததும், பூங்கொடி ஈரோட்டிலிருந்து அவரைப் பார்க்க வேண்டி ஒரு சொகுசு காரில் சென்னைக்கு வந்துகொண்டிருந்தார். பூங்கொடியுடன் அவரது உறவினர்களான கனி ஓவியம். ராஜேஷ் விஸ்வநாதன் ஆகியோரும் பயணம் செய்தனர். காரை கண்ணன் என்பவர் ஓட்டினார்.

இந்த விபத்தில் பூங்கொடி லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த காரை மீட்டு மீட்பு வாகனத்தில் இணைத்து அனுப்பி வைத்தனர்.
முகிலனின் மனைவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்தபின்னர் அவர் சென்னைக்கு புறப்படுவார் எனத் தெரிகிறது. சமூக ஆர்வலர் முகிலனின் மனைவி கார் விபத்தில் சிக்கினார் என்ற சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது