கிராமத்து அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்கிறார் ஜோதிகா. அந்த பள்ளிக்கூடத்தில் எதுவும் சரியில்லை. மிகவும் சீர் கெட்டு இருக்கிறது. இதை பார்க்கும் ஜோதிகா, தரமான கல்வியை தந்து உயர்த்த வேண்டும் என்று முடிவு செய்கிறார். முதல் முயற்சியாக பள்ளியை சுகாதார சீர்கேட்டில் இருந்து மீட்டெடுக்கிறார். பின்னர் மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோரை ஒழுங்கு படுத்துகிறார். இதையும் தாண்டி தனியார் பள்ளி உரிமையாளர் ஹரிஷ் பெராடி ஜோதிகாவிற்கு தொல்லை கொடுக்கிறார். இவைகளை சமாளித்து அந்த பள்ளிக் கூடத்தை ஜோதிகா எப்படி மேம்படுத்தினார் என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா, தற்போது சமூக அக்கறை கொண்ட படத்தின் கதையை தேர்வு செய்து நடித்திருக்கிறார். தலைமை ஆசிரியராக அரசு பள்ளியில் நடக்க கூடிய அவலங்களை மிகச்சிறப்பாக சுட்டிக் காட்டி அதற்கான தீர்வுகளையும் சொல்லியிருக்கிறார். தலைமை ஆசிரியர் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று தன்னுடைய கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் கவனத்தை ஈர்த்திருக்கிறார். தனியார் பள்ளி உரிமையாளராக வரும் ஹரிஷ் பெராடி, தனது பள்ளி எப்போதும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் செய்யும் வேலைகளில் நேர்மை இருப்பது சிறப்பு.

ஜோதிகாவுடன் நெருக்கமாக பழகும் சிறுவனின் நடிப்பு அபாரம். சில காட்சிகளில் மட்டுமே வரும் பூர்ணிமா பாக்யராஜ்ஜின் நடிப்பு நிறைவு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் சத்யன், பி.டி.மாஸ்டராக நகைச்சுவையில் கைக்கொடுத்திருக்கிறார். உதவி தலைமை ஆசிரியராக கவிதா பாரதியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.

கல்வி, பள்ளிக்கூடம் என முதல் படத்திலேயே சமூக அக்கறையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கௌதம் ராஜ். அரசு பள்ளிகளில் நடக்கும் தவறுகளையும், ஒழுங்குபடுத்தும் முறைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். சான் ரோல்டன் இசையில் பாடல்கள் அதிகமாக ஈர்க்க வில்லை. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறார். கோகுல் பெனாயின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.