கொல்கத்தா, ஜூலை 8:  கிரிக்கெட் உலகின் தாதா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இன்று தனது 47 பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் சட்டென நினைவுக்கு வரும் ஜாம்பவான்களில் சவுரவ் கங்குலிக்கும் முக்கிய இடம் உண்டு. ஆக்ரோஷம் பீறிடும் ஆட்டத்தை களத்தில் வெளிப்படுத்துவதுடன், வெற்றியானாலும், தோல்வியடைந்தாலும் அவற்றை களத்தில் கர்ஜனையுடன் வெளிப்படுத்துவதினாலேயோ, என்னவோ, இவருக்கு ரசிகர்கள் சூட்டிய செல்லப்பெயர்தான் ‘தாதா’. 300-க்கும் மேற்பட்ட ஒரு நாள் போட்டிகள், 100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள். 50-க்கும் மேற்பட்ட ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, டெஸ்ட் போட்டிகளில் 7,212 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 11,363 ரன்கள், அத்துடன் 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இதுபோக, இந்திய அணிக்கு தலைமையேற்று தனித்துவத்துடன் வழிநடத்தி சென்றவர், ஜாம்பவான் சச்சினுடன் தொடக்க வீரராக கைக்கொடுத்தவர் என்று அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முத்தாய்ப்பானது. கடந்த 1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான கங்குலி, 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார்.

பின்னர் பயிற்சியாளராக, ஆலோசகராக, பிசிசிஐ நிர்வாகியாக, மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக, வர்ணனையாளராக இந்திய கிரிக்கெட்டுக்கு இன்றளவும் தனது பங்களிப்பபை அளித்துவருகிறார். இந்த நிலையில், இன்று தனது 47-வது பிறந்தநாளை கொல்கத்தாவின் பெஹாலாவில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.