சென்னை, ஜூலை 8: மாநிலங்களவை தேர்தலில் வைகோ மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், திமுக சார்பில் கூடுதலாக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுக சார்பில் 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். அதையொட்டி திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்தனர். எஞ்சிய ஒரு இடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஒதுக்கப்பட்டு, அவரும் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவருடைய மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு நிலவுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு வைகோ மனு நிராகரிக்கப்பட்டால், அதை சரிசெய்ய கூடுதலாக இன்று திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மனுத் தாக்கல் செய்தார்.

இதுகுறித்து வைகோ விளக்கமளித்து செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

மாநிலங்களவைத் தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் எனக்கு ஒரு இடத்தை வழங்க திமுக தலைவர் ஸ்டாலின் முன்வந்தார். அது எனக்காக வழங்கப்பட்ட இடம் என்பது எங்களிடையே எழுதப்படாத ஒப்பந்தமாக இருந்தது.

இந்த நிலையில், என் மீது சாட்டப்பட்ட தேசத்துரோக வழக்கில் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற பின்னர் இந்த வழக்கில் இதுவரை யாருக்கும் தண்டனை விதிக்கப்படாததால் அதிலிருந்து நான் விடுதலை பெறுவேன் என எண்ணியிருந்தேன். ஆனால், எனக்கு தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேறொரு வேட்பாளரை மனுத்தாக்கல் செய்ய வைக்குமாறு ஸ்டாலினிடம் நான் யோசனை தெரிவித்தேன். அந்த யோசனையின் அடிப்படையில்தான் 3-வது வேட்பாளரை திமுக நிறுத்தி உள்ளது.

நாளை வேட்பு மனு பரிசீலனையின் போது எனது மனு ஏற்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை எனது மனு நிராகரிக்கப்பட்டால் திமுக சார்பில் 3 வேட்பாளர்கள் மாநிலங்களவை செல்வார்கள். எனது மனு ஏற்கப்பட்டால் திமுக வேட்பாளர் ஒருவர் விலக்கிக் கொள்ளப்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எனவே இது குறித்து மதிமுகவினர் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.