செ ன்னை, ஜூலை 8: பாலியல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சமூக ஆர்வலர் முகிலன் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சைக்கு பின்னர், அவரை இன்று எழும்பூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்துவர் என்று தெரிகிறது.

சமூக ஆர்வலர் முகிலன் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காணாமல் போனார். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் முகிலனை தேடிவந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் திருப்பதி ரெயில் நிலையத்தில் முகிலனை கண்டுப்பிடிக்கப்பட்டார். இதனையடுத்து, அவரை சென்னைக்கு அழைத்துவந்து சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர், 15 மணிநேரத்திற்கு மேல் முகிலனிடம் விசாரணை நடைபெற்றது.
இதனிடையே, கரூரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் சிபிசிஐடி போலீசார் முகிலனை நேற்று கைது செய்தனர்.

அதன்பின்னர், முகிலனுக்கு உடல்நலக்குறைவு இருந்ததால், அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அழைத்து சென்றனர்.

பின்னர், ராயபுரத்தில் உள்ள பெருநகர இரண்டாம் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை வீட்டில், போலீசார் முகிலனை ஆஜர்ப்படுத்தினர்.

அப்போது பேசிய முகிலன், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும், பாலியல் புகார் என் மீது வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் முகிலனை அனுமதிக்கும்படியும், பின்னர், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

அதன்படியே, இன்று காலை முகிலன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர், அவரை எழும்பூர் கோர்ட்டில் போலீசார் இன்று ஆஜர்ப்படுத்துவர்.

முன்னதாக, நீதிபதி வீட்டிலிருந்து புறப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய முகிலன் கூறுகையில், ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து என்னிடம் பேரம் பேசப்பட்டது.

அதற்கு சம்மதிக்காததால் என்னை கடத்தி சென்றனர். ஓரிடத்தில் அடைத்துவைத்து கருப்பு துணியால் என் முகத்தை மூடியதுடன், பல்வேறு ஊசிகளையும் எனக்கு போட்டார்கள்.

நான் கடத்தப்பட்ட காலத்தில் எனது மனைவி, பிள்ளைகள் அனைவரும் இறந்துவிட்டதாக என்னிடம் தெரிவித்தார்கள்.

நான் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து, நீதிபதியிடம் தான் முழுமையாக தெரியப்படுத்துவேன். என்னை கடத்திய விவகாரத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம்தான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும், என்று கூறியிருந்தார்.