சென்னை, ஜூலை 8:
துணிகளை உலரவைக்க சென்ற பெண் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் மல்லிகா (வயது 36). இவர் நேற்று மாலை 6.30 மணியளவில் துணிகளை துவைத்து, வீட்டின் பின்புறம் உலரவைப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது, அங்கு தொங்கிக்கொண்டிருந்த மின்வயரில் எதிர்பாராதவிதமாக மல்லிகாவின் கைப்பட்டதில் அவர் தூக்கிவீசப்பட்டார். உடனடியாக வீட்டிலிருந்தவர்கள் மல்லிகாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், மல்லிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து, மல்லிகாவின் மகன் புருஷோத்தம்மன் அளித்த புகாரின்பேரில், நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிந்து சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.