சென்னை, ஜூலை 8:பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வுகால பலன்களை உடனடியாக வழங்காததால் புதிய பேருந்தை இழப்பீடாக வழங்க கேட்டு, அரசு போக்குவரத்து கழக நடத்துனர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம், வேலூர் மண்டலத்தில் நடத்துனர்களாக பணியாற்றிய பக்தவச்சலம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றனர்.

பக்தவச்சலத்திற்கு பணிக் கொடை உள்ளிட்ட ஓய்வு கால பலன்களாக 9.74 லட்சம் ரூபாயும், ராதாகிருஷ்ணனுக்கு 18.21 லட்சம் ரூபாயும் வழங்கப்பட வேண்டும். பணிக் கொடை சட்டத்தின்படி ஓய்வுபெற்ற நாளிலேயே இந்த ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும்

.ஆனால், தங்களுக்கு குறித்த காலத்தில் அவை வழங்கப்படாததால், 18% வட்டியுடன் அந்த தொகையை ஒரே தவணையில் வழங்க வேண்டும் அல்லது அதற்கு பதிலாக புதிய பேருந்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், இம்மனு குறித்து 8 வார காலத்திற்குள் பதில் அளிக்கும்படி விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.