சென்னை, ஜூலை 8: மதுரவாயல் அருகே நேற்றிரவு வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக திண்டிவனத்தில் பதுங்கியிருந்த 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் நாயுடு (எ) வெங்கடேஷ் (வயது 28). இவரது நண்பர் ஆலப்பாக்கம் அய்யாவூர் நகரை சேர்ந்த பாலச்சந்தர் (வயது 27).

இவர்கள் இருவரும் நேற்றிரவு 8 மணி அளவில் வளசரவாக்கம் அருகே ஆற்காடு சாலையில் ஏகாம்பரம் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் ரோட்டில் நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பாலச்சந்தர் தப்பி ஓடி அருகில் இருந்த முட்புதரில் பதுங்கிக்கொண்டார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றனர்.

இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயமடைந்த பாலச்சந்தரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு ஒன்றில் சிக்கிய வெங்கடேஷ் அதன் பிறகு ஆந்திராவுக்கு சென்று விட்டதாகவும், சமீபத்தில் சென்னைக்கு திரும்பி வந்ததாகவும் தெரியவந்தது. மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கொலையில் தொடர்பு உடையவர்கள் திண்டிவனத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, திண்டிவனம் விரைந்த தனிப்படை போலீசார் அங்கு பதுங்கியிருந்த சங்கர், மணிகண்டன், பணப்பாண்டி, பிரபாகரன், முரளி கிருஷ்ணன் மற்றும் திவாகர் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

சென்னைக்கு அழைத்து வந்து அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது. மேலும் இதில் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.