சென்னை, ஜூலை 8: தேனி மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தேனி தொகுதி வாக்காளர் மிளானி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்துள்ளார். அதற்கான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக பல கோடி ரூபாய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்ற புகார் வேலூர் மக்களவைத் தேர்தலில் வந்தபோது தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தியது.

ஆனால்,தேனி தொகுதியில் இதேபோன்று அதிகளவில் புகார் வந்தபோதும், தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்தவில்லை.

தேனி மக்களவைத் தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் செய்தும், வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் பட்டுவாடா செய்தும், அதிமுக வேட்பாளர் ரவீந்தரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

எனவே, இவரது தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருமெனத் தெரிகிறது.