சென்னை, ஜூலை 8: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு செய்ய, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவடைந்த உடன், மாலையில் இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதை இப்போது நடைபெற உள்ள எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கலந்தாய்விலேயே நடைமுறைக்குக் கொண்டு வரவும் தீர்மானித்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுப்பி வைத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவையில் சில தினங்களுக்கு முன்பு திமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதே கருத்து காங்கிரஸ் சார்பிலும் வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கோரிக்கையை சட்டப் பேரவையிலேயே ஏற்றுக் கொண்ட முதல்வர் பழனிசாமி கூட்டத்துக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி, அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் இன்று மாலை 5.30 மணியளவில் தொடங்கவுள்ளது. இதில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மாநிலத்திலுள்ள முக்கியமான கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

என்னென்ன அம்சங்கள் விவாதிப்பு: மத்திய அரசின் இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ளும் மாநிலங்கள், 25 சதவீதம் மருத்துவக் கல்வி இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம் என இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்துக்கு கர்நாடகம், தமிழகம் தவிர்த்து மற்ற அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. 25 சதவீத மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரித்தாலும், நமது மாநிலத்திலுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு வந்து விடக் கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
எனவே, இதுபோன்ற அம்சங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.