சென்னை, ஜூலை 8: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாக்கள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது குறித்து சட்ட வல்லுனர்களுடன  கலந்தாலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், இந்தப்பிரச்சனை குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதன் மீது காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-

மு..க.ஸ்டாலின்: இந்த அவையில் 1.2.2017 அன்று 2 மசோதாக்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுடன் 18.2.2017 அன்று ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அரசியல் சாசனத்தில் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உள்ளது போல மாநில அரசுக்கும் அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தின் படி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2 மசோதாக்கள் 27 மாதங்கள் கிடப்பில் போடப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றத்தில் நீட் தொடர்பான ஒரு வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர், ஜனாதிபதியால் அந்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறுகிறார். இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாகும். மேலும் மாநில அரசை அவமதிக்கும் செயலாகும்.

எனவே மாநில சுயாட்சியை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை இந்த அவையில் கொண்டு வர வேண்டும். மேலும் நீட் தேர்வு மசோதா நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். மீண்டும் ஒரு மசோதாவை தாக்கல் செய்து அதை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். இதை இந்த செய்யத் தவறினால் வரலாற்று பிழை ஆகி விடும்.

கே.ஆர். ராமசாமி (காங்): (இதே கருத்தை வலியுறுத்தி பேசினார்): மசோதா நிராகரிக்கப்பட்டது மாநில அரசுக்கு தெரியுமா? தெரியாதா?
அமைச்சர் விஜயபாஸ்கர்: இந்த விஷயத்தில் யாரை கண்டிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். மருத்துவ பட்டப்படிப்பில் சேர முன்பு எந்த நுழைவுத்தேர்வும் எழுத வேண்டிய நிலையே நிலவியது.
2005-ம் ஆண்டு அண்ணா பல்கலைகக்கழகம் நுழைவு தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்தது. இதை ரத்து செய்து அரசாணை பிறப்பித்தது ஜெயலலிதா தான். 2006-ம் ஆண்டு இதை எதிர்த்து மாணவி ஒருவர் நீதிமன்றம் செல்ல மீண்டும் நுழைவு தேர்வு வந்தது. 2010-ம் ஆண்டு மத்திய அரசு நீட் தேர்வு குறித்து அறிவிக்கை வெளியிட்டது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசாகும்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நல்ல தீர்ப்பை ஜெயலலிதா பெற்று தந்தார். ஆனால் 2013-ம் ஆண்டு மத்திய அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ததை அடுத்து நீட் தேர்வு கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை. அவரது மறைவுக்கு பின்னரும் நாங்களும் ஓராண்டு விலக்கு பெற்றோம்.
காங்கிரஸ் கட்சியைச¢சேர்ந்த ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் வழக்கு போட்டதன் அடிப்படையிலேயே நீட் தேர்வு கட்டாயம் என தீர்ப்பு வந்துள்ளது. எனவே இதற்கு முழு பொறுப்பும் காங்கிரசுக்கு தான் உள்ளது.

ஸ்டாலின்: நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது 2010-ம் ஆண்டு என்பதை நாங்களும் ஒப்புக் கொள்கிறோம். அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி அதை ஏற்கவில்லை. ஆனால் பிரதமர் ஆன பின்பு அதை ஆதரிக்கிறார். 2011-ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வை நாங்கள் அனுமதிக்கவில்லை. எனவே மத்திய அரசை கண்டித்து ஒரு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும். மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்ப வேண்டும்.

ஓபிஎஸ்: சுகாதாரத்துறை அமைச்சர் சரியான விளக்கத்தை அளித்திருக்கிறார், சட்ட நிபுணர்களுடன¢ஆலோசித்து இதுபற்றி முடிவெடுக்கப்படும்.
(விஜயபாஸ்கர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அனுமதி கோரினர். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை, மாறாக ஸ்டாலினுக்கு வாய்ப்பு அளித்தார்)
ஸ்டாலின்: மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்காவிட்டாலும வற்புறுத்தியாவது தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சர் சி.வி.சண்முகம்: 28.9.2017 அன்று மத்திய அரசிடமிருந்து ஒரு கடிதம் வந்ததது. அதில் நீட் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதற்கு விளக்கம் கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம¢ அனுப்பியது. ஆனால் ¢இதுவரை மத்திய அரசிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. அதே சமயம் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் ஒரு இ-மெயில் கடிதத்தை குறிப்பிட்டு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறுகிறார். எனவே இதுபற்றி ஆராய்ந்து தான் ஒரு முடிவெடுக்க வேண்டும். மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அந்த முடிவு அமையும். கண்டனம் தெரிவிப்பதால் எந்த பிரயோசனமும் இல்லை.

முதலமைச்சர்: மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். உச்சநீதிமன்றத்தில் இதுபற்றி முறையிடுவதா அல்லது சட்டசபையில் எந்த மாதிரியான தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பது பற்றி அதில் ஆலோசனை நடத்தப்படும். அதன்படி நல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
(காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் மீண்டும் எழுந்து விளக்கம் தர அனுமதி கோரினர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்).