காஞ்சிபுரம், ஜூலை 9: காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் எழுந்தருளி உள்ள அத்திவரதர் இன்று மாம்பழ வண்ணப் பட்டு உடுத்தி, 5 வகையான மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு திருக்காட்சி தந்தார்.

காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் ஆதி அத்திவரதர் கடந்த 1-ம்தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

தினந்தோறும் அதிகாலை 5 மணி அளவில் சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனத்துடன். திருவாராதனை மற்றும் நைவேத்தியம் முடிந்தவுடன் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு 6 மணி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த 8நாட்கள் வெவ்வேறு அலங்காரம் செய்யப்பட்டிருந்த ஆதி அத்திவரதரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

8-ம் நாளான நேற்று ஒரு நாள் மட்டும் அத்திவரதரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பக்தர்கள் தரிசித்துள்ளனர்.

9-ம் நாளான இன்று அதி அத்திவரதருக்கு செண்பகப்பூ கிரீடம் அணிவிக்கப்பட்டு, ஐந்து வகையான மலர்களால் மாலை சாற்றப்பட்டு மாம்பழ நிற பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

வழக்கம்போல் இன்றும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 5 மணி நேரத்திற்கு மேலாக நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் வருகையையொட்டி காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா ஏற்பாட்டில், தற்போது தெற்கு கோபுர வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் எந்தவித சிரமும் இன்றி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், நீண்ட தூரம் நிற்கும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு வடக்கு கோபுர பகுதியில் இரண்டு பக்கமும் தடுப்பு மற்றும் மேற்கூரை அமைக்கப்பட்டு போக்குவரத்து இடையூறு இல்லாமலும் பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பா. பொன்னையா மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சுந்தரமூர்த்தி மற்றும் ஏராளமான அரசு அதிகாரிகள் அனைத்து வசதிகளையும் செய்துள்ளனர்.