புதுவை, ஜூலை 9:  குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்துவிட்டு தப்பியவரை போலீசார் தேடிவருகின்றனர்.

புதுவையிலுள்ள முதலியார் பேட்டையில் வசித்துவந்தவர் தமிழ்வாணன் (வயது 28). இவர், நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட்டில் உள்ள கோழிக்கடையில் வேலை பார்த்துவந்துள்ளார்.
இந்த நிலையில், அதே மீன்மார்க்கெட்டில் இன்று காலையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார், தமிழ்வாணன். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தமிழ்வாணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனர்.
அதே நெல்லித்தோப்பு மார்கெட்டில் காய்கறி கடையில் வேலை செய்து வரும் தேவா என்பவரும், தமிழ்வாணனும் நேற்றிரவு மதுபோதையில் இருந்தபோது, இருவரிடையேயும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருகில் இருந்த கல்லை எடுத்து தமிழ்வாணனின் தலையில் போட்டுவிட்டு தேவா தப்பியோடியுள்ளார் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கொலை செய்துவிட்டு தப்பியோடிய தேவாவை போலீசார் தேடிவருகின்றனர். நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.