சென்னை, ஜூலை 9: தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ராஜ்யசபா தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வேட்புமனு ஏற்கப்படுமா என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பரிசீலனைக்கு பின் அவருடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே திமுக சார்பில் மூன்றாவதாக மனு தாக்கல் செய்திருந்த என்.ஆர்.இளங்கோ மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அதிமுக, பாமக, திமுக, மதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஆறு பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், அதிமுக சார்பில் 3 வேட்பாளர்களும், திமுக சார்பில் 2 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். திமுக ஆதரவுடன் வைகோவும் மனுத்தாக்கல் செய்தார்.

ஆனால், வைகோவுக்கு கடந்த 5-ம் தேதி தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வைகோவின் வேட்பு மனு ஏற்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்தியாவில் தேசதுரோக வழக்கில், மக்கள் பிரதிநிதித்துவ சட்ட்ததின் அடிப்படையில் ஓராண்டு சிறை தண்டனை பெற்ற முதல் நபர் வைகோ என்பதால் அவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவாரா? என்ற பரபப்பு நிலவியது. அதனால் திமுக சார்பில் வைகோவுக்கு மாற்று வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்த 7 பேரையும் தவிர்த்து 4 சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களது வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்றது.
அப்போது வைகோவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மனு ஏற்கப்பட்டது குறித்து வைகோ கூறுகையில், சட்டத்தின் அடிப்படையில் எனது மனு ஏற்றுக்கொள்ளப்படும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். இருப்பினும் மாற்று வேட்பாளரை ஏற்பாடு செய்யுமாறு நான் தான் ஸ்டாலினிடம் வலியுறுத்தினேன். நான் மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினார். அதன் அடிப்படையில் நான் போட்டியிடுகிறேன். மதிமுக, திமுக இடையே எந்த பிரச்சினையும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து திமுக சார்பில் மாற்று வேட்பாளராக நிறுத்தப்பட்ட என்.ஆர்.இளங்கோ தனது மனுவை திரும்ப பெற்றுக் கொள்வார் என்று தெரிகிறது.