டாக்கா, ஜூலை 9:  வங்கதேச கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீவ் ராட்ஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததால், அதிருப்தியில் இருந்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இத்தகைய அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.

வங்கதேச கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீவ் ராட்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு 2 வருட ஒப்பந்ததத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டார். அதன்படி, இன்னும் ஒரு வருட பதவிக்காலம் எஞ்சியுள்ள நிலையில், ஸ்டீவ் ராட்ஸை தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளது, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். இந்த நடவடிக்கை, இருதரப்பிலும் சுமூகமாக பேசி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம், ராட்ஸின் பயிற்சி செயல்பாடுகளில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் நீல் மெக்கன்ஸி, காலவரையற்ற விடுப்பு எடுத்து சென்றுவிட்டார்.

இதேபோல், பவுலிங் பயிற்சியாளர் கோர்ட்னி வால்ஷ், சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி மற்றும் ஃபிஸியோ தெரபிஸ்ட் திஹன் சந்திரமோகன் ஆகியோரது பதவிக்காலம் நடப்பு உலகக்கோப்பை தொடருடன் முடிவடையும் சூழலில். தற்போது தலைமை பயிற்சியாளரையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியுள்ளது. இந்த சூழலில், இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வங்கதேசம், வரும் 26-ம் தேதி கொழும்புவில் நடக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது, குறிப்பிடத்தக்கது.