தாம்பரம், ஜூலை 9:
தினமும் போதையில் தகராறு செய்வதுடன், பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் இருந்ததால் விரக்தி அடைந்த தந்தை மகன் தூங்கும்போது தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் அன்னல் ஆறுமுகனார் தெருவை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன் மணிகண்டன் (வயது24).
போதைக்கு அடிமையான மணிகண்டன் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வாராம்.அதேபோன்று மற்ற இடங்களிலும் தகராறு செய்வதுடன், அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மகன் கெட்டு சீரழிந்து வருவதை பார்த்து உதயகுமார் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் இன்று காலை தலையில் அம்மிகல்லைப் போட்டு மணிகண்டன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சேலையூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தந்தை உதயகுமாரை கைது செய்தனர்.
அப்போது போலீசாரிடம் உதயகுமார் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்துவருவான். நேற்றும் இதேபோன்று தகராறு செய்தான். பின்னர் தூங்க சென்று விட்டான்.
இதை பார்த்து நீண்ட நேரம் விழித்திருந்தேன். ஒரு கட்டத்தில் அவன் இருந்து சீரழிவதை விட செத்து விடலாம் என்று நினைத்தேன். அப்போது அவன் நல்லா தூங்கி கொண்டிருந்தபோது அருகில் இருந்த அம்மி கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெற்ற தந்தையே தன் மகன் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.