புதுடெல்லி, ஜூலை 10: தங்களது ராஜினாமாவை ஏற்பதில் சபாநாயகர் காலம் கடத்துவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் அதிருதி எம்எல்ஏக்கள் சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனாதளம் கூட்டணி அரசு கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. காங்கிரசில் இருந்து 11 எம்எல்ஏக்கள் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து 2 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்து சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம்
கொடுத்தனர்.

இவர்களுடன் காங்கிரசில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ரோஷன் பெக் என்பவரும் ராஜினாமா செய்ததால் மொத்தம் 14 எம்எல்ஏக்கள் ஆளும் கூட்டணியில் இருந்து விலகி உள்ளனர். இது குறித்து சபாநாயகர் ரமேஷ்குமார் அளித்த பேட்டியில் 5 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மட்டுமே முறையாக இருக்கிறது. எஞ்சிய 8 எம்எல்ஏக்களின் கடிதங்கள் முறைப்படி இல்லை. எனவே இவர்களை நேரில் அழைத்து விசாரிக்க வேண்டியது உள்ளது என்றார்.

தங்களது ராஜினாமைவை ஏற்க சபாநாயகர் காலம் கடத்துவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் இன்று அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் சபாநாயகர் ரமேஷ்குமார், அரசியல் சட்ட கடமையை செய்யத்தவறி உள்ளார். எங்களது ராஜினாமா கடிதங்களை ஏற்பதில் காலம் கடத்துகிறார். நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவசர வழக்காக உடனடியாக ஏற்க மறுத்து நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்தனர்.

இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கி உள்ள மும்பை நட்சத்திர ஓட்டலுக்கு கர்நாடக அமைச்சர் சிவக்குமார் சென்றார். அவரை நுழைவு வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தினார்.
அப்போது போலீசாருக்கும், அவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ‘நான் எங்கள் கட்சி நண்பர்களை சந்திக்க வந்திருக்கிறேன்’. என்னை உள்ளே விடுங்கள் என்று கூறினார். இதற்கு பதிலளித் போலீஸ் அதிகாரிகள், உங்களிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என அவர்கள் கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். உங்களை பார்க்க அவர்கள் அஞ்சுகிறார்கள். எனவே திரும்பிச் செல்லுங்கள் என்று கூறினர். ஆனால் அமைச்சர் சிவக்குமார், ‘நாள் முழுவதும் இங்கேயே காத்திருப்பேன். என் நண்பர்களை சந்திக்காமல் போக மாட்டேன் என்று பிடிவாதமாக கூறினார். அப்போது மழை பெய்யத்தொடங்கியது. அந்த சமயத்திலும் சிவக்குமார் அங்கேயே நின்றுகொண்டு கோஷம் எழுப்பினார். கர்நாடக கூட்டணி அரசை சீர்குலைக்க பிஜேபி முயற்சி செய்கிறது என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.

இதனிடையே 224 பேர் கொண்ட சட்டமன்றத்தில் ஆளும் கூட்டணியின் பலம் 105ஆக குறைந்து விட்டதால் முதலமைச்சர் குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என கோரி பெங்களுரில் எடையூரப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். சட்டமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் பிஜேபி எம்எல்ஏக்கள் உட்கார்ந்த வாறு கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில், நேற்று பெங்களுரில் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை ராஜினாமா செய்தவர்கள் உள்ளிட்ட 20 பேர் புறக்கணித்தனர். வரும் நாட்களில் மேலும் சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வார்கள் என்பதையே இந்த புறக்கணிப்பு உணர்த்துவதாக பிஜேபி தலைவர்கள் கூறினர்.

இந்த சூழ்நிலைகளில் கர்நாடக காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நாளுக்கு நாள் நெருக்கடி முற்றி வருகிறது. முதலமைச்சர் குமாரசாமி நீங்கலாக அனைத்து அமைச்சர்களும் ஏற்கனவே தங்களது ராஜினாமா கடிதங்களை முதலமைச்சர் கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.