சென்னை, ஜூலை 10: வேலூர் மக்களவை தொகுதியில் அடுத்த மாதம் 5-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
வேலூர் மக்களவை தொகுதியில் கோடிக்கணக்கில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த பணம் கைப்பற்றப்பட்டது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. பணம் கைப்பற்றப்பட்டது.
இது குறித்த புகார்களை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தது. வேலூரை தவிர்த்து எஞ்சிய 542 தொகுதிகளிலும் தேர்தல¢ நடைபெற்றது,
இந்நிலையில் வேலூரில் தேர்தல் ஆகஸ்ட் 5-ந் தேதி நடைபெறும் என்று கடந்த வாரம் தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 18-ந் தேதி ஆகும். மறுநாள் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும். மனுக்களை விலக்கிக் கொள்ள 22-ந் தேதி கடைசி நாள்.
ஆகஸ்ட் 5-ந் தேதி நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 9-ந் தேதி எண்ணப்படும். வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாளில் இருந்து நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, திமுக சார்பில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த கதிர் ஆனந்தே மீண்டும் போட்டியிடுகிறார்.

புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி,சண்முகம், அதிமுக சின்னத்தில் மீண்டும் களமிறங்குகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். மக்கள் நீதிமய்யம் இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதற்கிடையே வேலூர் மக்களவை தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர்களாக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோரும், மாவட்ட செயலாளர்கள் நந்தகுமார், காந்தி, முத்துசெல்வி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.