சென்னை, ஜூலை 10: திமுக வேட்பாளர் என்.ஆர்.இளங்கோ தனது மனுவை விலக்கிக் கொண்டதை அடுத்து மாநிலங்களவைக்கு வைகோ, அன்புமணி உள்பட 6 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.
தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பில் 3 வேட்பாளர்களும், திமுக கூட்டணி சார்பில் வைகோ உள்பட 3 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஆனால், வைகோவுக்கு கடந்த 5-ம் தேதி தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வைகோவின் வேட்பு மனு ஏற்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. அதனால் திமுக சார்பில் வைகோவுக்கு மாற்று வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ கடைசி நேரத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த 7 பேரையும் தவிர்த்து 4 சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களது வேட்பு மனுக்கள் நேற்று பரிசீலனைக்கு ஏற்று கொள்ளப்பட்டன.

அப்போது வைகோ உட்பட 7 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரியான சட்டசபை செயலர் சீனிவாசன் அறிவித்தார். இந்நிலையில் மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்திருந்த திமுக வேட்பாளர் என்.ஆர். இளங்கோ இன்று தனது மனுவை விலக்கிக் கொண்டார்.இதனையடுத்து வைகோ, அன்புமணி ராமதாஸ், அதிமுக சார்பில் முகமது ஜான், சந்திரசேகரன், திமுக சார்பில் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகிய 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வாகிறார்கள். மனுக்களை விலக்கிக்கொள்ளும் அவகாசம் முடிவடைந்த பின்னர் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.