புதிய வட்டாட்சியர் அலுவலகம்: எம்எல்ஏ பழனி கோரிக்கை

சென்னை

சென்னை,ஜூலை 11: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி, குன்றத்தூர், மாங்காடு மற்றும் கொளப்பாக்கம் ஆகிய வருவாய் குறுவட்டங்களை இணைந்து புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என அத்தொகுதி எம்எல்ஏ பழனி கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ பழனி பேசுகையில்: குன்றத்தூர், மாங்காடு மற்றும் கொளப்பாக்கம் ஆகிய வருவாய் குறுவட்டங்களை இணைந்து புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க அரசு முன்வர வேண்டும்.

23 கிராமங்களை சேர்ந்த 3 லட்சத்து 47 ஆயிரம் மக்கள் உள்ளனர். இந்த பகுதிகள் மக்கள் பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டி உள்ளதால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். ஆகவே மக்களின் இன்னல் போக்க புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும்.

அமைச்சர் உதயகுமார்: அரசாணை எண் 70 வருவாய்துறை நாள் 10.2.2016படி ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சீரமைக்கப்பட்டு, அதிலுள்ள குன்றத்தூர் மற்றும் மாங்காடு குறுவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதியதாக உருவாக்கப்பட்ட பல்லாவரம் வட்டத்தில் சேர்க்கப்பட்டது.

மேலும் மாங்காடு குறுவட்டத்திலிருந்து 13 கிராமங்களைக் கொண்டு புதிய கொளப்பாக்கம் குறுவட்டம் உருவாக்கி அதனை ஆலந்தூர் வட்டத்தில் சேர்த்து ஆணையிடப்பட்டது. எனவே அரசணை எண் 279 வருவாய்துறை நாள் 9.6.2003ன் படி நிர்ணயிக்கப்பட்ட அளவு கோல்களின் அடிப்படையிலி ஸ்ரீபெரும்புதூர் வட்டம் ஏற்கனவே சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாங்காடு, கொளப்பாக்கம் மற்றும் குன்றத்தூர் ஆகிய மூன்று வருவாய் குறுவட்டங்களை ஒன்றிணைத்து புதிய வருவாய் வட்டம் உருவாக்க அரசு முயற்சி மேற்கொள்ளும் என்றார்.