வேலூர், ஜூலை 11: வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான இன்று. அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகு தேர்தல் ஆகஸ்டு 5-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. மனுத்தாக்கல் செய்ய
18-ம்தேதி கடைசி நாளாகும். 19-ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 22-ந்தேதி வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். இதையடுத்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

அதிமுக சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த முறை போட்டியிட்ட அமமுக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

வேட்பு மனுக்களை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுத்தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்யும் வேட்பாளர் வைப்புத் தொகை ரூ.25 ஆயிரம் பணமாக செலுத்த வேண்டும். மனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இன்று காலை 11.40 மணியளவில் வேட்பு மனுதாக்கல் செய்தார். அமைச்சர் கே.சி.வீரமணி, பா.ம.க., தே.மு.தி.க., த.மாகா. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் வந்திருந்தனர்.

வேட்பு மனுதாக்கல் செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்களை கேமராக்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.