நபோலி, ஜூலை 11:  சர்வதேச தடகளப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை டூட்டி சந்த் படைத்துள்ளார்.

உலக யுனிவர்சியாட் தடகளப்போட்டி இத்தாலியின் நபோலி நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் இளம் வீராங்கனையான டூட்டி சந்த் பங்கேற்றார். 11.32 விநாடிகளில் பந்தய தூரத்தை முதல் வீராங்கனையாக கடந்து அவர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம், சர்வதேச தடகளப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை டூட்டி சந்த் படைத்துள்ளார். வரலாற்று சாதனை நிகழ்த்திய இந்தியாவின் இளம் தடகள வீராங்கனை டூட்டி சந்திற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஒடிசாவைச் சேர்ந்த டூட்டி சந்த், கடந்த முறை 11.24 விநாடிகளில் பந்தய தூரத்தை எட்டி, தேசிய சாதனையைப் படைத்திருந்தார். 2015-ல் உலக யுனிவர்சியாட் தடகளப் போட்டியின் குண்டு எறிதல் பிரிவில் இந்திய வீரர் இந்தர்ஜித் சிங் தங்கம் வென்றிருந்தார். அதன்பிறகு தற்போதுதான், 100 மீட்டர் பிரிவில் டூட்டி சந்த் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில், சுவிட்சர்லாந்து வீராங்கனை டெல் போன்டே வெள்ளியும், ஜெர்மனி வீராங்கனை லிசா குவா யீ வெண்கலமும் வென்றனர்.