சென்னை, ஜூலை 11: மேகதாது அணை தொடர்பான கர்நாடகாவின் முன்மொழிவை நிபுணர் குழு விவாதத்துக்கு அனுமதிக்கக்கூடாது என்று மத்திய மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், கஜேந்திர சிங் செகாவத் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதியை பெறுவதற்கான முன்மொழிவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்பதில் பிரதமர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்று அவருக்கு கடந்த ஜூன் 24-ந் தேதியன்று கடிதம் எழுதியிருந்தேன்.

இந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவகால மாற்றத் துறையின் கீழ் வரும் ஆற்றுப்படுகை மற்றும் புனல் மின்சார நிபுணர் மதிப்பீட்டுக் குழு, மேகதாது அணை கட்டுவது தொடர்பான புதிய திட்டப் பணிகளுக்கான முன்மொழிவை 19-ந் தேதியன்று நடக்கும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இணைத்திருப்பது எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் முன்மொழிவை விவாதத்துக்காக இணைத்திருக்கும் இந்தக் குழுவின் இத்தகைய செயல்பாடு, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணைக்கும், சுப்ரீம் கோர்ட் டின் உத்தரவுக்கும் முரணான செயல்பாடாகும்.

தமிழகம் உள்ளிட்ட காவிரியின் நீரைப் பெறும் மாநிலங்களின் முன்அனுமதியை கர்நாடகா அரசு பெறவில்லை. மேகதாது அணை உள்பட எந்தவொரு அணையை கட்டினாலும், காவிரி நீரைப் பெறக்கூடிய மாநிலங்கள், தீர்ப்பின்படி பெறக்கூடிய நீர் அளவை பெற முடியாமல் போய்விடும்.

மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடகாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பதோடு, கோர்ட்டு அவமதிப்பு வழக்கையும் தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கு அங்கு நிலுவையில் உள்ளது.

எனவே, மேகதாது அணை கட்டுவது தொடர்பான புதிய திட்டப் பணிகளுக்கான முன்மொழிவை 19-ந் தேதியன்று நடக்கும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கும்படி ஆற்றுப்படுகை மற்றும் புனல் மின்சார நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்கு அறிவுறுத்த மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவகால மாற்றத் துறைக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்.

எதிர்காலத்திலும் கர்நாடகா அளிக்கும் முன்மொழிவுகளை நிராகரிக்கும்படி நிபுணர் குழுவுக்கு உத்தரவிட வேண்டும். தற்போதுள்ள முன்மொழிவையும் தள்ளுபடி செய்து கர்நாடகா அரசுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என்றார்.