மும்பை, ஜூலை 11: இந்திய அணி கேப்டன் விராட் கோலி செய்த சிறிய தவறுதான் போட்டியை மாற்றிவிட்டதாக, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

நடப்பு உலகக்கோப்பை தொடரின் இந்தியாவிற்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய இந்தியாவின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், ஆட்டம் கைவிட்டு போகும் இக்கட்டான, கடுமையான சூழ்நிலைகளில் தோனியை முன்னே அனுப்பியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், அவர் போட்டியை கட்டுக்குள் கொண்டுவந்திருப்பார். இறுதியில், ஜடேஜா அற்புதமாக விளையாடிக்கொடுத்தார். தோனி. ஒவ்வொரு ரன்களாக எளிதாக எடுத்துக் கொண்டிருந்தார்.

குறிப்பாக ஹர்திக் பாண்டியாவிற்குப் பதில் தோனியை, 5-வது இடத்தில் அனுப்பியிருந்தால் நாம் வெற்றி பெற்றிருக்கலாம். அது ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். இறுதியில் செல்லச் செல்ல தோனி கண்டிப்பாக வெற்றி பெற்றுக் கொடுத்து இருப்பார். தோனியை பின்வரிசையில் இறக்கி, கோலி செய்த சிறிய தவறுதான் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது என அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.