சென்னை, ஜூலை 11: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நாளை முதல் 29 சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் பேசுகையில்: செய்யாறு தொகுதி தூசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கூடுதலாக புதிய நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும். மேலும் வெண்பாக்கம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும்.

அமைச்சர் காமராஜ்: உறுப்பினர் குறிப்பிட்டுள்ள தூசி தொகுதியில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் 35 லட்சம் செலவில் கட்டிட தரப்படும். மேலும் வெம்பாக்கம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தேவையின் அடிப்படையில் அமைத்து தரப்படும். டெல்டா மாவட்ட தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 360 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டிட தரப்பட்டுள்ளது.

உறுப்பினர் சம்பந்தப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 நேரடி நெல்கொள்முதல் நிலையஙகள் 1 கோடியே 30 லட்சம் செலவில் கட்டி தரப்பட்டுள்ளது. எம்எல்ஏ தூசி கே.மோகன்: தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தில் 7500 பேரும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 ஆயிரம் பேரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணி புரிந்து வரு கின்றனர். அவர்களுக்கு மத்திய அரசின் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போன்று பணி நிரந்தரம் செய்து வேண்டும்.

அமைச்சர் காமராஜ்: சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு போனஸ், ஊக்கத் தொகை, பொங்கல் பரிசு உள்ளிட்டவை மாநில அரசு சார்பாக வழங்கப்படுகிறது. அதே போன்று 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டநிலையில் , நாளை முதல் 29 சதவீதம் ஊதிய உயர்வு சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது என்று கூறினார்.