புதுடெல்லி, ஜூலை 11:

கர்நாடகா மற்றும் கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்கும் பிஜேபியின் நடவடிக்கையை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே அரசியல் சூழல் கொந்தளிப்பாக இருக்கும் நிலையில், கோவாவில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்களில் 10 பேர் நேற்று தங்களை பிஜேபியில் இணைத்துக் கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்துள்ளார்.

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்று கூறி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜனநாயகத்தை காப்பாற்று என்று வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.