சென்னை, ஜூலை 11: செங்குன்றத்தில் மிளகாய் பொடியுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்து வழிப்பறி செய்ய முயன்றவர்களில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  தலைமறைவான இருவரை தேடிவருகின்றனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் சந்திப் (வயது 40). இவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து நகைகள் வாங்கி விற்பதற்காக சென்னை மாதவரம் ஆந்திர பஸ் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து பாரிமுனைக்கு மாநகரப் பேருந்தில் சென்றுக்கொண்டிருந்துள்ளார். இந்த தகவலையறிந்த மர்மநபர்கள் 5 பேர், சந்தீப் சென்றுக்கொண்டிருந்த பேருந்தை இரண்டு பைக்குகளில் பின் தொடர்ந்தனர். இதனையடுத்து, செங்குன்றம் பாடியநல்லூரில் உள்ள செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் இருந்த போலீசார் இந்த பைக்குகளை நிறுத்தமுற்பட்டனர்.

போலீசாரை கண்டதும் ஒரு பைக்கில் வந்த இருவர் வந்தவழியே திரும்பி தப்பித்துச்செல்ல, மற்றொரு பைக்கில் வந்த 3 பேரை பிடித்து, அவர்களை செங்குன்றம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், அவர்கள் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த கோபி (வயது 29), பிரித்திஷ் (வயது 28), ஆஞ்சநேயலு (வயது 24) என்பது தெரியவந்தது. இவர்கள் போலீசாரிடம் கூறிய வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: சந்திப் நகை வாங்குவதற்காக சென்னைக்கு வருவதை முன்கூட்டியே அறிந்த நாங்கள், அவரை பின்தொடர்ந்து, அவர் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி, நகை வாங்க வைத்திருந்த பணத்தை திருடிச்செல்வதற்காகதான் அவரை பின்தொடர்ந்தோம், என்றனர்.

இது தொடர்பாக  செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து அவர்கள் மூவரையும் கைது செய்தனர். அவர்கள் வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.