சென்னை, ஜூலை 11: போதை பழக்கத்திற்கு அடிமையாகியிருந்த மகனை, அடித்ததில், அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதையடுத்து, தந்தையை போலீசார் கைது செய்தனர்.  சென்னை அண்ணாசாலை வெங்கடேசன் நாயகன் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவரது மகன் தனுஷ் (வயது 16), புதுப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவருகிறார்.

தனுஷ், கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, தனுஷை அவரது பெற்றோர் பலமுறை கண்டித்துள்ளதாக தெரிகிறது.  இந்த நிலையில், நேற்றிரவு ராஜேஷ் வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தனுஷ் போதையில் இருப்பதை கண்டதும் எரிச்சலடைந்த ராஜேஷ், தனுஷை அடித்துள்ளார்.

நிலைதடுமாறி கீழே விழுந்த தனுஷிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.  இது தொடர்பாக, தந்தை ராஜேஷை அண்ணாசாலை போலீசார் கைது செய்தனர்.