சென்னை, ஜூலை 12: 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் கூடிய ரெயில் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு புறப்பட்டது.

சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் தட்டுப்பாட்டைபோக்கும் வகையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரூ.65 கோடி செலவில் ரெயில் மூலம் குடிநீர் எடுத்து வர முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே பார்சம்பேட்டையில் உள்ள 5-வது யார்டுக்கு மேட்டுசக்கர குப்பம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்காக குழாய் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்றது.

அதே போல பார்சம்பேட்டை யார்டிலும் ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து 50 வேகன்கள் கொண்ட சரக்கு ரெயில் ஜோலார்பேட்டைக்கு கொண்டுவரப்பட்டது.

அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதனையடுத்து ரெயில் வேகன்களில் குடிநீர் ஏற்றும் பணி நடந்தது. ஒவ்வொரு வேகனிலும் 50 ஆயிரம் லிட்டர் வீதம் 50 டேங்கரிலும் மொத்தம் 25 லட்சம் லிட்டர் குடிநீர் ஏற்றப்பட்டது.

இந்த தண்ணீர் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு குழாய் மூலம் தொட்டியில் இறக்கப்பட்டபின் மீண்டும் ரெயில் வேகன்கள் ஜோலார்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்படும். நாள் ஒன்றுக்கு 4 முறை இதே ரெயில் குடிநீர் ஏற்றிச்செல்லும். இதன் மூலம் தினமும் ஒரு கோடி லிட்டர் குடிநீர் எடுத்துவர திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் குடிநீர் நிரப்பப்பட்ட வேகன்கள் அடங்கிய குடிநீர் கொண்டு வரும் ரெயில் ஜோலார்பேட்டையில் இருந்து இன்று காலை சென்னைக்கு புறப்பட்டது. ரெயிலை குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் மகேஷ்வரன் தொடங்கி வைத்தார்.