பர்மிங்காம், ஜூலை 12:  பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில், ஆஸ்திரேலியாவை சுலபமாக வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா அணி முதல் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் முதல் 6 ஓவர்களிலேயே ஆஸி.,யின் டாப் ஆர்டர் காலியானது. ஸ்டீவ் ஸ்மித்(85) மட்டும் நிலைத்து நின்று அரைசதம் கடந்தார். ஆர்ச்சரின் பவுன்சர் பந்து அலெக்ஸ் கேரியின் தாடையை பதம்பார்த்து ரத்தம் வழிந்த சூழலிலும், பேன்டேஜ் போட்டு கொண்டு அர்ப்பணிப்புடன் ஆடிய கேரியை பாராட்டாமல் இருக்கமுடியாது. இருப்பினும், அவரது காயம் காரணமாகவே அவரால் நிலைத்து நிற்கமுடியவில்லை. அரைசதம் கடக்க 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், கேட்ச் கொடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினார், கேரி.

அடுத்தடுத்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஒரு ஓவர் எஞ்சிய நிலையில், அனைத்துவிக்கெட்டுகளையும் பறிகொடுத்த ஆஸ்திரேலியா அணி 223 ரன்கள் மட்டுமே எடுத்தது.
குறைந்த இலக்கை விரட்டியபடி களமிறங்கிய இங்கிலாந்து அணி, தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, பவுண்டரி, சிக்ஸர்கள் என தெறிக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினர். அத்துடன் ஆஸி.,யின் பந்துவீச்சையும் தெறிக்கவிட்டனர். அதன்படி, 2 விக்கெட்டுகளை மட்டுமே விட்டுகொடுத்து, 32.1 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி இலக்கை (226 ரன்கள்) எட்டியது.

இதன்மூலம், உலகக்கோப்பை வரலாற்றில், 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுடன், இறுதிப்போட்டிக்கும் தகுதிப்பெற்றுள்ளது, இங்கிலாந்து.