அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை

தமிழ்நாடு

கந்தர்வக்கோட்டை தொகுதி, கீரனூரிலுள்ள அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ ஆறுமுகம் பேசுகையில்: எனது தொகுதி கீரனூரிலுள்ள அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்த அரசு ஆவன செய்யுமா.

அமைச்சர் விஜயபாஸ்கர் : உறுப்பினர் குறிப்பிட்டுள்ள கீரனூரிலுள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உறுப்பினர் மேலும் அம்மருத்துவமனைக்கு கூடுதல் வசதி வேண்டும் என கோரினாலும் அதனையும் நிறைவேற்றி தர தயாராக உள்ளோம்.
காங்., எதிர்கட்சி தலைவர் ராமசாமி: சிவகங்கை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டாலும், மருத்துவர்கள் இல்லாத நிலை உள்ளது. ஆகவே மருத்துவர் நியமன் செய்து தர வேண்டும்.

அமைச்சர் விஜயபாஸ்கர்: மருத்துவர்கள் நியமனத்தை பொறுத்தவரை டிஎன்பிஎஸ்சி எதிர்பார்த்து காத்திருக்காமல், எம்ஆர்பி மூலம் நியமிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் 2 தினங்களுக்கு முன்பு கூட 589 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கியுள்ளார். அவர்கள் எல்லோரும் தற்போது பணியில் இணைந்து வருகிறார்கள்.

மேலும் பிஜி முடித்தவர்கள் கட்டாயமாக 2 ஆண்டுகள் இது போன்ற பகுதிகளில் பணிபுரிய வேண்டும் என சிறப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்படிப்பாக செல்லக்கூடிய நேரத்தில் இது போன்று சவாலை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த சவாலையும் எதிர்கொண்டு இது போன்ற பகுதிகளில் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்.