புதுடெல்லி, ஜூலை 12: கர்நாடகத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் பிரச்சனையில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று மாநில சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அதிருப்தி எம்எல்ஏ ஒருவர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிருப்தி எம்எல்ஏக்கள் பத்து பேரின் ராஜினாமா மற்றும் அவர்களை தகுதி நீக்கம் செய்யும் விவகாரம் ஆகியவற்றில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சபாநாயகருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மறு தரப்பின் வாதத்தை கேட்காமலேயே உச்ச நீதிமன்றம் இவ்வாறு ஆணை பிறப்பித்தது.
முதலமைச்சர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோரினார். இத்தகைய சூழ்நிலையில் சபாநாயகர் என்ன முடிவை எடுக்க முடியும் என்று அவர் கேட்டார்.

ஆனால் உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதனிடையே, உச்ச நீதிமன்றத்தின் உஷ் த்தரவுக்கு இணங்க அதிருப்தி எம்எல்ஏக்கள் நேற்று சபாநாயகர் முன்பு ஆஜரானார்கள். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர், தற்போதைய நிலையில் தான் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று கூறினார். மிரட்டல் காரணமாக ராஜினாமா செய்ததாக சில எம்எல்ஏக்கள் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோர முதலமைச்சர் குமாரசாமி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.