பர்மிங்காம், ஜூலை 12:  நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேசன் ராய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. இதில், 20-வது ஓவரில் கம்மின்ஸ் வீசிய பந்தை அடிக்க முயற்படும்போது, பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சென்றது. கேரி, தனது கையில் பந்தை பிடித்ததும் அவுட் என்று முறையிட்டார். உடனே, நடுவர் தர்மசேனாவும் விரலை உயர்த்தி அவுட் கொடுத்துவிட்டார். அதிர்ச்சியடைந்த ராய், பந்து பேட்டில் படவில்லை என்று நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். அதேசமயம், ரிவ்யூ வாய்ப்பும் தீர்ந்துவிட்டதால் தனது தரப்பு நியாயத்தை நிரூபிக்கமுடியாமல், வேறு வழியின்றி ராய், அதிருப்தியுடனேயே பெவிலியன் திரும்பினார்.

ஆனால், டிவி ரீப்ளேயில் அது அவுட் இல்லை என்று தெளிவாக தெரியவந்தது. இது நியாயமே ஆனாலும், நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக ஜேசன் ராய்க்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து, 30% அபராதமாக விதிக்கப்பட்டது. அப்போ, தவறான முடிவை அறிவித்த நடுவருக்கு அபராதம்? என்பது இன்னும் விடை கண்டுப்பிடிக்கப்படாத கேள்வியாகவே உள்ளது.