லண்டன், ஜூலை 13:  நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்துதான் அதிசபட்ச விலைக்கு (ரூ. 1.5 லட்சம்) ஏலம் போயுள்ளது.

நடப்பு உலகக்கோப்பை தொடர் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், லீக் போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட பந்துகள், ஸ்கோர்ஷீட்கள். டாஸ் போடப்பட்ட காயின் உள்ளிட்டவை ஆன்லைன் மூலம் ஏலத்தில் விடப்பட்டது. அதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்து அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. அந்த போட்டியில் பயன்படுத்தப்பட்ட டாஸ் காயின் ரூ.1 லட்சத்துக்கும், ஸ்கோர்ஷீட் ரூ.75 ஆயிரத்துக்கும் ஏலம் கேட்கப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி மீது அனைவரின் கவனமும் இன்றளவும் உள்ளது என்பது இதன்மூலம் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

இதேபோல், ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்து, 300 அமெரிக்க டாலர்களுக்கும், ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்து, 150 அமெரிக்க டாலர்களுக்கும் ஏலம் போனது.