இந்து மதத்தலைவர்களை கொலை செய்ய இஸ்லாமிய தீவிரவாதிகள் சதியா? 4 இடங்களில் சோதனை

TOP-1 சென்னை முக்கிய செய்தி

சென்னை, ஜூலை 13: சென்னை மண்ணடி, வேப்பேரி, நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லை, சிக்கல் ஆகிய நான்கு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடைபெற்ற கொடூரத் தாக்குதலில் தொடர்பு இருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்து தலைவர்களை கொலை செய்வதற்கு அவர்கள் சதித்த்திட்டம் எதுவும் செய்து வருகிறார்களா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பானது தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலை நிகழ்த்தியது. இதில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகளுடன் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு உளவுத்துறை கூறி இருந்தது.

இதன்படி, கேரளாவிலும், தமிழகத்திலும் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பலரைக் கைது செய்தனர். பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொச்சியில் உள்ள அலுவலகத்தில் இருந்து இன்று சென்னை வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவானது, மண்ணடி லிங்கி செட்டி தெருவில் உள்ள இஸ்லாமிக் ஹிண்ட் என்ற அமைப்பின் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறது.

இது போல் புரசைவாக்கத்தில் இஸ்லாமிய அமைப்பின் மாநில தலைவர் முகமது புகாரி வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு உள்ள ஊழியர் தாஜுதீன் என்கிற உஸ்மானிடம் காலை 6 மணி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல நாகப்பட்டினத்தில் மஞ்சக்கொல்லை, சிக்கல் ஆகிய இடங்களில் அசன் அலி, ஹாரீஸ் முகமது ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் சில ஆவணங்களும், லேப்டாப் மற்றும் பென் டிரைவ்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. அதில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

தடை செய்யப்பட்ட முஸ்லீம் அமைப்புடன் இவர்கள் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்துத் தலைவர்களை கொலை செய்வதற்கு அவர்கள் சதி செய்வதாக புகார் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். இதில் ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த தாக்குதல் நடத்தியவர்களுக்கும் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கோவையில் சோதனை நடத்தி மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு துண்டுப் பிரசுரங்கள், பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மதுரையில் ஒரு மாணவரிடமும், கன்னியாகுமரியில் ஒரு மாணவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கேரளாவிலும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு சிலரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை வந்து இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.