சென்னை, ஜூலை 13: தமிழகத்தில் நீதித்துறை, ஆட்சி துறை, சட்டமன்றம், பத்திரிகை துறை ஆகிய ஜனநாயகத்தின் 4 தூண்களும் தங்கள் எல்லைக்குள் சுதந்திரமாக செயல்படு கின்றன என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சிறப்பு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், கேரள கவர்னர் சதாசிவம் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒரு வழக்கறிஞராக தனது பணியை தொடங்கி 2 முறை ராஜ்யசபா உறுப்பினராகி ஜனாதிபதியாக உயர்ந்து இருக்கிறார். பீகார் மாநில கவர்னராக அவர் இருந்த நேரத்தில் ஏழைகளின் பாதுகாவலனாக இருந்தார். அதேபோல் கேரள கவர்னர் பி.சதாசிவம் நமது மண்ணின் மைந்தனாக இருந்து நீதிமன்றத்தின் உயர் பதவிக்கு சென்றவர். தனது பதவி காலத்தில் பல்வேறு முக்கிய தீர்ப்புகளை அவர் வழங்கியிருக்கிறார்.

உச்சநீதிமன்ற நீதிபதி போப்டே ஆதார் அட்டை இல்லை என்பதற்காக எந்த இந்தியருக்கும் அடிப்படை சேவைகள் மறுக்கப்படக்கூடாது என சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி மகாராஷ்டிராவில் வழக்கறிஞராக பணியை தொடங்கி பெண் கைதிகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து அரிய பணியாற்றி இன்று தலைமை நீதிபதியாக உயர்ந்து இருக்கிறார்.

“நீதிக்கு முன் அனைவரும் சமம்’’ என்ற கொள்கையை உறுதியாக கடைபிடிக்கும் மாநிலம் தமிழ்நாடாகும். நீதி கேட்ட பசுவிற்காக, அதன் கன்றை கொன்ற தனது மகனை தேர் காலில் இட்டு கொன்ற மனுநீதி சோழன், நீதி தவறியதற்காக தனது உயிரை விட்ட பாண்டிய மன்னன், புறாவிற்காக தனது தொடையிலிருந்து சதையை அறுத்துக் கொடுத்த சிபி சக்கரவர்த்தி போன்ற நீதிக்கு தலை வணங்கும் எண்ணற்ற மன்னர்கள் வாழ்ந்த நாடு தமிழ்நாடு.

தெற்காசிய நாடுகளில் சட்டக்கல்விக் கென தோற்றுவிக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் இது. ஆசியாவிலேயே குறைந்த கட்டணத்தில் தரமான சட்டக் கல்வி வழங்கப்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டப்படி நீதித்துறை, ஆட்சி துறை, சட்டமன்றம், பத்திரிகை துறை ஆகிய ஜனநாயகத்தின் 4 தூண்களும் தங்கள் எல்லைக்குள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்போது தான் மக்கள் அமைதியுட னும், மகிழ்ச்சியுடனும் வாழ முடியும். தமிழகத்தில் இந்த 4 பிரிவுகளும் சுதந்திரமாக செயல்படுகின்றன.

தமிழகத்தில் இந்த பல்கலைக் கழகத்தின் கீழ் 13 சட்டக்கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த ஆண்டு மேலும் 3 சட்டக்கல்லூரி துவக்கப்படும். கடந்த 8 ஆண்டுகளில் ரூ.998 கோடியே 33 லட்சம் மதிப்பில் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்பு கள் கட்டப்பட்டுள்ளன.

சட்டத்தின் அனைத்து பயன்களும் ஏழைகளை சென்றடைய வேண்டும். இந்த கூட்டுப்பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இந்த இலக்கை அடைய நீதியரசர்களும், நீதிமன்றங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.