காஞ்சிபுரம், ஜூலை 13: காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் எழுந்தருளி உள்ள அத்திவரதர் இன்று பச்சைப் பட்டு அணிவிக்கப்பட்டு, மனோரஞ்சிதம், வெள்ளைத்தாமரை, செண்பகம், சம்பங்கி, பெருமாளுக்கு உகந்த மஞ்சள் நிற ரோஜாக்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை சூடி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார்.

இன்று 2-ம் சனிக்கிழமை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. 1.50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சியில் ஆதி அத்திவரதரின் 13ம் நாள் காட்சியும், 2ம் வார சனிக்கிழமை என்பதாலும் இன்று ஆதி அத்திவரதருக்கு பச்சை பட்டுடுத்தி, தலையில் மல்லிகை மலர்கள் சூடப்பட்டு, சிறப்பு வாய்ந்த மனோரஞ்சிதம், வெள்ளைத்தாமரை, மஞ்சள் நிற ரோஜாக்கள், சம்பங்கி மற்றும் துளசிப் பூக்களால் மாலைகள் அணிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ர பாதம் இசைக்க நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. வழக்கத்தை விட இன்று வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். மேலும் விஐபிகளின் வரிசை மட்டும் நீண்டுள்ளதால் 2 மணி காத்திருந்து தரிசரிக்கும் நிலை உள்ளது.

இன்று அதிகாலை முதலே பக்தர்கள் வருகை தந்ததால் எங்குபார்த்தாலும் கோவிந்தா… கோவிந்தா என்ற முழக்கமே காணமுடிகிறது. மேலும் வழி நெடுகிலும் உள்ள பக்தர்களுக்கு பானகம், மற்றும் புளியோதரை, வெண் பொங்கல், தயிர்சாதம், எலுமிச்சை சாதம்போன்ற பிரசாதங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

13ம் நாளான இன்று 2 வது சனிக்கிழமை என்பதால் பெருமாள் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். வழி நெடுக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகமும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.இன்று 1.50 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.