திருச்சி, ஜூலை 13: திருச்சி மலைக்கோட்டையில் 9 ஆண்டுகளுக்கு முன் நடந்த சிலை திருட்டில் தொடர்புடையவர் நேபாளத்தில் பிடிபட்டார்.இவரை கும்பகோணம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என ஐஜி பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு திருச்சி மலைக்கோட்டை ராணி மங்கம்மாள் மண்டபத்தில் 31 சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு, 21 சிலைகள் மீட்கப்பட்டன.  இதில், 6-வது குற்றவாளியான தலைமறைவாக இருந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா கல்லலைச் சேர்ந்த ராம்குமார் கிருஷ்ணன் (36) என்பவர், நேபாள எல்லை சோனாலியில் சுங்கச்சாவடியில் கைது செய்யப்பட்டார். அவரை, விரைவில் கும்பகோணம் நீதிமன்றத்துக்கு கொண்டு வருவோம் என பழனியில் முகாமிட்டுள்ள சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 20 சிலைகள் குறித்து மட்டுமே உயர்நீதிமன்ற புலனாய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இருபதாயிரம் சிலைகள் வரை காணாமல் போயிருக்க வாய்ப்புள்ளது.

காணாமல்போன நடராஜர் சிலை ஆஸ்திரேலியா அடிலெய்டில் உள்ள “கேலரி ஆப் சதர்ன் ஆஸ்திரேலியா’ என்ற அருங்காட்சியகத்தில் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.30 கோடியாகும். இதை திருப்பித் தர அந்நாட்டு அரசு தயாராக உள்ளது.

இதை கொண்டு வர அனுமதி கேட்டு முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் கடிதம் கேட்டேன். ஆனால், அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை. பின்னர், சிலையை கொண்டு வர உங்களுக்கு ஆர்வமில்லையா எனக் கேட்டவுடன், கடிதம் தந்தார்.

ஆனால், அந்த சிலையை ஆஸ்திரேலிய பிரதமர் தனது சொந்த செலவில் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்.  அப்போது, ஒரு அர்த்தநாரீஸ்வரர் கல் சிலையையும் சேர்த்து வழங்கினார். அது விருத்தகிரீஸ்வரர் கோயிலில் காணாமல்போன சிலையாகும். அந்த சிலை காணாமல் போனதை அறநிலையத் துறை பதிவு செய்யவே இல்லை என்றார்.