சென்னை, ஜூலை 13: தரமணி கல்லுக்குட்டை ஏரியில் அனுமதியின்றி திடீர் ஆய்வு செய்ததாக கூறி, அறப்போர் இயக்கத்தை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை தரமணி கல்லுக்குட்டை ஏரிக்கு இன்று காலை 7 மணியளவில் சிலர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். திடீரென ஏரியில் ஆய்வு மேற்கொண்டதால், அப்பகுதி பொதுமக்களுக்கும், ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்ததும், தரமணி இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில், அவர்கள் அறப்போர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, உரிய அனுமதியின்றி ஏரியை ஆய்வு செய்ய வந்ததாக கூறி, 11 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.